மகாராஷ்டிராவில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியரை காரில் இழுத்து சென்ற வாடிக்கையாளர்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மேக்கர்-பண்டார்பூர் பால்கி நெடுஞ்சாலையில் ஒரு சாலையோர உணவகம் உள்ளது. இந்த உணவகத்துக்கு கடந்த சனிக்கிழமை ஒரு காரில் வந்த வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு முடித்த பின்னர் ஓட்டல் ஊழியர் பில்லுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பணம் தருகிறோம் என்று கூறி ஸ்கேனரை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஸ்கேனரை எடுத்து வரச் சென்றார். அதற்குள்ளாக அந்த நபர்கள் காரில் தப்பிக்க முயன்றனர். ஓட்டல் ஊழியர் ஓடி வந்து காரை மறித்து பணம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காரை அவர்களை கிளப்பினர்.

ஓட்டல் ஊழியர் பணம் கேட்டு ஓடி வரவே அவரைகாரின் ஜன்னல் வழியாக கையைப் பிடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் தனிமையான இடத்தில் காரை நிறுத்தி, அந்த ஓட்டல் ஊழியரை அடித்து உதைத்து அவரிடமிருந்து ரூ.11,500-ஐ பறித்துக் கொண்டனர். மேலும் அந்த ஊழியரின் கண்ணைக் கட்டி காரின் பின்பகுதியில் கட்டி வைத்திருந்தனர்.

பின்னர் அவரை மறுநாள் காலையில் அவிழ்த்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஓட்டலுக்கு வந்த ஊழியர், உணவக உரிமையாளருடன் சென்று திண்ட்ருட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி-யில் காரில் அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகள் படமாகியிருந்தன. அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE