கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: சித்தராமையா திட்டவட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனபாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவியை கைப்பற்றதுணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பரமேஷ்வரா, சதீஸ் ஜார்கிகோலி ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை. எதிர்க்கட்சிகள் என்னை குறி வைத்து பொய் புகார்களை கூறி வருகின்றன. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. என்னை தேர்வு செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும் மேலிடத் தலைவர்களும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை. எனவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

முதல்வர் நாற்காலி காலியாக இல்லை. அதேபோல எந்த காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புவதாக அறிக்கை வெளியிடவில்லை. எஞ்சியுள்ள ஆண்டுக்கும் நானே முதல்வராக இருப்பேன். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். எனவே நான் முதல்வராக தொடர்வதில் சிக்கல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE