“நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்” - உ.பி முதல்வர் யோகி

By செய்திப்பிரிவு

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத குழுவின் தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார். தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை அழித்து, உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளுவதுதான் அவரது நோக்கமாக உள்ளது. இப்போது தேசத்திலிருந்து இடஒதுக்கீட்டை ரத்து செய்ய சதி செய்து வருகிறார்.

நம் தேசத்தில் பாஜகவினர் இருக்கும் வரை பிரிவினைவாதம் வெற்றி பெறாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உறுதி கொண்டுள்ளது. பிரிவினைக்கு வித்திடும் தனது செயலுக்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்” என யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் கருத்துகளால் சலசலப்பு: அமெரிக்காவுக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது. அது மிகவும் பலவீனமடைந்துள்ளது. தற்போது அது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. அது திறம்பட போராடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இதனிடையே, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி மீது அமித் ஷா சாடல்: “நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பன்னுன் ஆதரவு: வெர்ஜினியாவில் புலம் பெயர்ந்தஇந்தியர்களுடன் ராகுல் காந்தி உரையாடும்போது, “இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே” என்றார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியது துணிச்சல் மிக்க உரை மட்டுமல்ல. அது கடந்த 1947 முதல் இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE