“10 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது, இப்போது எதிர்த்துப் போராடுகிறது” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைந்து விட்ட நிலையில் தற்போது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் க்ளப்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். தற்போது அது எதிர்த்துப் போராடி வருகிறது, ஆனால் அது உடைந்து விட்டது. மகாராஷ்டிரா அரசு எங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். என் கண் முன்னே அது நடந்தது.

எங்களின் எம்எல்ஏகள் விலைக்கு வாங்கப்பட்டனர், திடீரென அவர்கள் பாஜகவின் எம்எல்ஏக்களாக மாற்றப்பட்டதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். எனவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது. அது மிகவும் பலவீனமடைந்துள்ளது. தற்போது அது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. அது திறம்பட போராடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

அப்போது, “தேர்தல் முடிவுகளைப் பார்த்த பின்பும், இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர், “ஆம், அது நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்திய வாக்காளர்களை உறுதியானவர்கள், அறிவாளிகள் என்று சொல்வது மட்டும் போதாது. ஏனென்றால் இந்திய வாக்காளர்கள் ஒரு முழு அமைப்பாகவே அறியப்படுகிறார்கள். எனவே நம்மிடம் சமநிலை இல்லை என்றால், வாக்காளர்கள் அறிவாளியாகவும் உறுதியானவர்களாகவும் மாறலாம். அது முக்கியமில்லை.

எங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். வேறு எந்த ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடந்திருக்குமா என்று தெரியாது. ஒருவேளை இது மாதிரியான விஷயங்கள் சிரியாவிலோ அல்லது ஈராக்கிலோ நடந்திருக்கலாம்.

என்மீது 20-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இந்திய வரலாற்றிலேயே அவதூறு வழக்குக்காக சிறைதண்டனை பெற்ற நபர் நானாகவே இருப்பேன். எங்களின் மாநில முதல்வர்களில் ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார் ஆகையினால் ஒரு வகையில் இந்திய வாக்காளர்கள் உறுதியானவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் பாறை போல உறுதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிற்பி தேவை ஆனால் இப்போது அது இல்லை.

இந்த 21ம் நூற்றாண்டில் நவீன நாட்டின் பிரதமர் நான் கடவுளிடம் பேசுகிறேன். நான் மற்றவர்களை விட வித்தியாசமானவன். நீங்கள் எல்லோரும் உயிரியல் ரீதியாக பிறந்தவர்கள், நான் அவ்வாறு பிறக்காத மனிதன். எனக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு உண்டு என்று மக்களிடம் கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை ஆட்டம் முடிந்து விட்டது. நாங்கள் பிரதமரைத் தோற்கடித்து விட்டோம்.

மக்களவையில் நுழைந்தவுடன் அவர் செய்த விஷயம் மிகவும் அழகானது. அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தலையில் வைத்துக் கொண்டார். இது ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு. ஒரு பக்கம் அவர் அரசியலமைப்பை அழிக்கிறார். மறுபக்கம், இந்திய மக்கள் அதை அவரின் தலையில் வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE