சீக்கியர்கள் பற்றி மீண்டும் பேசினால் ராகுல் மீது வழக்கு தொடர்வோம்: பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீக்கியர்கள் தொடர்பான கருத்தை ராகுல் காந்தி இந்தியாவில் கூறினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என பாஜக செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ளார். அவர் வெர்ஜினியாவில் புலம் பெயர்ந்தஇந்தியர்களுடன் உரையாடும்போது, “இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே’’ என்றார். இது தொடர்பாக டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் நேற்று கூறியதாவது:

3,000 சீக்கியர் படுகொலை: டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் தலைப்பாகை அகற்றப்பட்டது. தலைமுடி வெட்டப்பட்டது. தாடி மழிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இதெல்லாம் நிகழ்ந்தது பற்றி ராகுல் கூறவில்லை. சீக்கியர்கள் பற்றி அமெரிக்காவில் கூறியதை இந்தியாவில் மீண்டும் கூற முடியுமா என ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். ராகுல் அவ்வாறு கூறினால், அவர் மீது வழக்கு தொடர்வேன். அவரை நீதிமன்றத்துக்கு இழுப்பேன். இவ்வாறு ஆர்.பி.சிங் கூறினார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புள்ள பதவியில் ராகுல் இருக்கிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் வெளிநாட்டில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கமுயன்றதில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளதால் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சிந்தனைகள் ராகுல் மனதில் வேரூன்றியுள்ளன. இதனால் இந்தியாவின் நற்பெயரை அவர் கெடுக்க முயன்று வருகிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE