சிட் ஃபண்ட் நிறுவனங்களின் நிதி சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாடிக்கையாளர்களுக்கு சிட் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் நிதி சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க மத்திய நிதி அமைச்சகத்திடம் அகில இந்திய சீட்டு நிதியங்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகில இந்திய சீட்டு நிதியங்கள் சங்கத்தின் தலைவர் பிரவீன், பொதுச் செயலாளர் சிற்றரசு, பொருளாளர் அருணாசலம், ஆலோசனைக் குழுத் தலைவர் இளங்கோவன் ஆகிய சங்க நிர்வாகிகள் சமீபத்தில் மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர்.

இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெறும் வட்டித்தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போல் சீட்டு நிதியங்களின் சேவைக்கட்டணத்துக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கவேண்டும். 1982-ம் ஆண்டின் சிட் ஃபண்ட்ஸ் சட்டத்தை தற்போதைய சூழல்களுக்கு ஏற்ப சீரமைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சங்கம் வலியுறுத்தியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE