ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலத்தை அபகரித்த மாபியா கும்பல்: அமலாக்கத் துறை கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் 1,800 ஏக்கர் நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம்மாபியா கும்பல் அபகரித்துள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.3,000 கோடி எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோட்டா நாக்பூர் குத்தகை (சிஎன்டி) சட்டத்தின் கீழ், வனப்பகுதி நிலங்கள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் விற்க முடியாத பிரிவின் கீழ் உள்ளன. ஆனால், இந்த நிலங்களை எல்லாம் மாபியா கும்பல் அபகரித்துவிட்டதாக அமலாக்கத்துறைக்கு பல புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த நில ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. போலி ஆவணங்கள் மூலம், மொத்தம் 1,800 ஏக்கர் நிலத்தை மாபியா கும்பல் அபகரித்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.3,000 கோடி.

இந்த நில ஊழல் வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ராஞ்சியில் ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக அபகரித்துள்ள 8.86 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.31 கோடி. இந்த நில ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டார்.

பழங்குடியினர் நிலங்களை அபகரித்த மாபியா கும்பல் மற்றும் வருவாய் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் கடந்த 1932-ம் ஆண்டு வரை உள்ள ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளனர். இந்த நில ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பானு பிரதாப் பிரசாத்துக்கு சொந்தமான இடம் மற்றும் 17 பதிவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சோதனை செய்தது. அப்போது 11 பெட்டிகளில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றவாளிகள் அனைவரும் பின்தேதியிட்ட போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். போலி பத்திரங்களை தயாரிக்க போலி முத்திரைகளையும் குற்றவாளிகள் வைத்திருந்தனர் என அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ஜார்க்கண்ட்டில் மாபியா கும்பல் அபகரித்துள்ள 1,800 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.3,000 கோடி என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE