கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தாவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், நாளை (செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்தவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை இன்று விசாரித்தது. இன்று காலை விசாரணை தொடங்கியதும், சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குற்றம் நிகழ்ந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளில் 27 நிமிடங்களை மட்டுமே கொல்கத்தா காவல் துறை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், தடயவியல் முடிவுகள் குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்து கேள்விகளை எழுப்பினார். இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் சிபிஐ வசம், மேற்கு வங்க காவல் துறை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், குற்றம் நிகழ்ந்ததை அடுத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய 14 மணி நேர தாமதம் ஏற்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் சடலத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க, சமூக வலைதளங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் தொடர்பான புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆர்.ஜி.கர் மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்த மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் 23 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 6,00,000 நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். காவல் துறையின் அனுமதியின்றி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் காயமடைந்த காவலர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேற்கு வங்க அரசை அறிவுறுத்திய தலைமை நீதிபதி சந்திரசூட், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொது மருத்துவமனைகளில் நிலைமையை மதிப்பீடு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். தனியான பணி அறைகள், ஓய்வறைகள், சிசிடிவிகளை நிறுவுதல் ஆகிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த 28 நாட்களாக பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு வராததால் மேற்கு வங்கத்தின் சுகாதார அமைப்பில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டார். நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக, மாலை 5 மணிக்கு முன்னதாக மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினால், அவர்களுக்கு எதிராக இடமாற்றம் உள்ளிட்ட எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்தார். அதேநேரத்தில், மருத்துவர்கள் தொடர்ந்து பணி செய்யாமல் இருந்தால் பாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

மருத்துவர்கள், சமூகத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். விசாரணையை செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சந்திரசூட், அன்றைய தினம் புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE