நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சி - குற்றப்பத்திரிகையில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தாக்குதல் தினமான 13-ம் தேதி, பார்வையாளர் மாடத்திலிருந்த 2 பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா) திடீரென மக்களவைக்குள் நுழைந்து இருக்கைகளின் மீது ஏறி தாவிச் சென்றதுடன், குப்பிகளில் இருந்து வண்ண புகைகளை வீசினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் 2 பேர் (அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத்) இதேபோன்ற செயலில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 2 பேர் (லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத்) கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லியில் உள்ள பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 1,000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர். ஜூலை மாதம் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறல் சதித் திட்டத்தை தீட்டிய முக்கிய நபர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டி.மனோரஞ்சன் என்பவரும் ஒருவர் என சந்தேகிக்கிறோம். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம்மைசூருவில் உள்ள ஓர் அடுக்கு மாடி குடியிருப்பில் 10 பேர் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, மனோரஞ்சன், ஓர்அமைப்பை உருவாக்க வேண்டும் என யோசனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் புகை குப்பிகளை வீசுவது குறித்தும் ஆலோசித்துள்ளனர். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-வது முறையாக குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் 7 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மீதி 3 பேர் பின்வாங்கிவிட்டனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு பெண்ணை சேர்க்க திட்டமிட்டனர். இதன்படி நீலம் என்ற பெண் சேர்க்கப்பட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் ஓட்டலில் 3-வது முறையாக சந்தித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பங்கேற்றுள்ளனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 4-வது முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது நாடாளுமன்ற நுழைவுச் சீட்டு பெறுவது மற்றும் புகை குப்பிகளை வீசுவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

கடைசியாக சம்பவம் நடந்த 2023 டிசம்பர் 13-ம் தேதி குருகிராம் மற்றும் இந்தியா கேட் பகுதியில் சந்தித்து பேசி உள்ளனர். இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்துவது, உலக அளவில் புகழ் பெறுவது, அதிகாரத்தை கைப்பற்றுவது மற்றும் பணக்காரர் ஆவது ஆகிய நோக்கங்களுடன் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE