வெள்ளம் பாதித்த பகுதிகளில் வறட்சி; வறட்சி பகுதிகளில் வெள்ளம்: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் தலைகீழ் மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் பல பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக தலைகீழ் மாற்றங்கள்ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து ஐபிஇ குளோபல் மற்றும் எஸ்ரி- இந்தியா என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு பகுதிகள் வறட்சி பகுதிகளாகவும், வறட்சி பகுதிகள் வெள்ள பாதிப்பு பகுதிகளாகவும் மாறிவருகின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளாக இருந்து வறட்சி பகுதிகளாக மாறிய மாவட்டங்களின் எண்ணிக்கை, வறட்சியிலிருந்து, வெள்ளப் பகுதியாக மாறிய மாவட்டங்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், குண்டூர், கர்னூல், ஒடிசாவின் கட்டாக், தெலங்கானாவின் மகபூப்நகர், நல்கொண்டா, பிஹாரின் பஸ்சிம் சம்பரன் ஆகிய பகுதிகள்வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து வறட்சி பகுதிகளாக மாறியுள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றில் வறட்சிபகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வறட்சி பகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பெங்களூரு, புனே, அகமதாபாத், பாட்னா, பிரயாக்ராஜ் ஆகிய மாவட்டங்களில் மாற்றங்களை அதிகம் காணமுடிகிறது. நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும்மத்திய பகுதிகளில் வறட்சி அதிகரித்துள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட், சுரேந்தர் நகர்,ராஜஸ்தானின் அஜ்மீர், ஜோத்பூர், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் ஆகிய பகுதிகளில் வெள்ளம், வறட்சி இரண்டையும் சந்தித்துள்ளன. ஆய்வின் முடிவுகள் வறட்சி பகுதிகள் அதிகரித்துள்ளதையும், வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது. திரிபுரா, கேரளா, பிஹார், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ளமாவட்டங்களில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளம்,வறட்சி, புயல், வெப்ப அலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இவற்றில் 45 சதவீத பகுதிகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 80 சதவீத மாவட்டங்களுக்கு மேல் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இந்தாண்டு சவுராஷ்டிரா பகுதியிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தின் தீவிரம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. எல் நினோ பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கனமழை, வெள்ளம் மற்றும் வறட்சி அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஇ குளோபல் அமைப்பின் தலைவர் அபினாஷ் மொகந்தி கூறுகையில், ‘‘கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, குஜராத் வெள்ளம், ஓம் பர்வத மலையில் பனிக்கட்டிகள் மாயமானது போன்றவை பருவநிலை மாற்றத்துக்கான சாட்சியங்கள். 2036-க்குள், இந்திய மக்கள் பெரும்பாலானோர் தீவிர பருவநிலை மாற்ற பாதிப்புக்கு ஆளாவார்கள் என தெரியவந்துள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE