இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு?: மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒருவருக்கு அந்த நோய்க்கான அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

"நோயாளி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. கவலை அடையத் தேவை இல்லை" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவருக்கு குரங்கு அம்மை நோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம், "ஏற்கனவே நிறுவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி, இந்த விவகாரம் கண்காணிக்கப்படுகிறது. நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், நாட்டில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் அந்த நபருடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) முன்னதாக மேற்கொண்ட இடர் மதிப்பீட்டோடு இந்த புதிய வழக்கின் வளர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. என்றாலும் அச்சப்பட தேவை இல்லை.

இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் தொடர்பான நோய் வழக்குகளை கையாள, நாடு முழு அளவில் தயாராக உள்ளது. சாத்தியமான ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அவற்றைத் தணிக்கவும் நடவடிக்கைகள் தயாராக உள்ளன" என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE