மம்தா பானர்ஜியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - பதவியை ராஜினாமா செய்தார் திரிணமூல் எம்.பி.

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி., ஜவ்கர் சிர்கார் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ஜவ்கர் சிர்கார், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "ஊழல் பற்றியும் கட்சியின் சில பிரிவு தலைவர்களிடம் அதிகாரித்துவரும் வலுவான ஆயுத யுக்திகள் குறித்தும் மாநில அரசு அக்கறை காட்டாததால் நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன். ஊழல் அதிகாரிகள் (அல்லது மருத்துவர்கள்) உயர் மற்றும் முக்கிய பதவிகளைப் பெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில், அரசாங்கத்துக்கு எதிராக இந்த அளவுக்கான எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையை நான் பார்த்ததே இல்லை. ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கர சம்வத்தினால் பாதிக்கப்பட்ட நான் ஒரு மாத காலம் பொறுமையாக காத்திருந்தேன். பழைய மம்தா பானர்ஜி பாணியில், போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்களுடன் நீங்கள் நேரடியாக பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவே இல்லை. அரசு இப்போது என்ன தண்டனை நடவடிக்கையை எடுத்திருந்தாலும் அது மிகவும் குறைவு மற்றும் தாமதமானதே.

கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்குவங்கத்தின பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக எனக்கு நீங்கள் அளித்த வாய்ப்புக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இனியும் நான் எம்.பி.யாக தொடர விரும்பவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல், வகுப்புவாதம் மற்றும் எதேச்சதிகாரத்துக்கு எதிரான எனது அர்ப்பணிப்பு வெறும் வார்த்தைகளால் ஆனது இல்லை. மோதலுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையை கட்சி எடுக்காவிட்டால், மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் கைப்பற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விதத்தை மம்தா பானர்ஜி கையாண்ட விதம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. திரிணமூல் கட்சியைச் சேர்ந்த சாந்தனு சென், அரசு நடத்தும் மருத்துவமனையின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்ததால் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து சேகர் ரே கொல்கத்தா மருத்துவர் கொடூர கொலை வழக்கில் போலீஸ் விசாரணை குறித்து கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE