மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி - ட்ரோன் தாக்குதலால் மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு மே 3ம் தேதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இந்த முறை ட்ரோன்கள், ராக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிஷ்ணுபூர், கிழக்கு இம்பால் மாவட்ட மக்கள் விடிய விடிய சிறிய விளக்குகளைகூட அணைத்துவிட்டு அச்சத்தில் உறைந்தனர்.

இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார், “மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர்.

இந்தக் கொலைக்கு பின்னர், மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்கார்கள் உட்பட நான்கு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர்.

மணிப்பூர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “போராட்டக்காரர்கள் குழு ஒன்று கிராமத்துக்குள் புகுந்து அங்கு ஒருவரைக் கொன்ற பின்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக இந்த கொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி ஆகிய இரண்டு தரப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன” என்றார்.

மணிப்பூரில் ராக்கெட் தாக்குதல்: மாநிலத்தில் 17 மாதங்களுக்கு முன்பு வன்முறை உருவாகித் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை தாக்குதலில் முதல் முறையாக ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பின்னர் இந்த ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பின்னிரவில் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், “குகி போராட்டக்காரர்கள் நீண்ட தூரம் தாக்கும் வகையிலான ராக்கெட்டை பயன்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட ராக்கெட் குறைந்தது நான்கு அடிகள் உள்ளது. துரு பிடிக்காத வகையில் துத்தநாகம் பூசப்பட்ட (galvanised) இரும்புக்குழாயில் வெடிமருந்துகளை நிரப்பி, அதனை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரில் வைத்து சுடப்பட்டுள்ளது. ராக்கெட் அதிக தூரம் செல்வதற்கு போராட்டக்கார்கள் அதில் வெடிமருந்துகளின் அளவினை மாற்ற வேண்டும். அமைதியாக இருந்த மாதங்களில் அவர்கள் அதற்கு பயிற்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE