ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பண்டிட் பெண் முதல்முறை போட்டி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அரசியலில் கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த டெய்சி ரைனா என்ற பெண் போட்டியிடுகிறார்.

டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த டெய்சி ரைனா கடந்த சில ஆண்டுகளாக புல்வாமா மாவட்டத்தின் ஃப்ரிசால் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி வகித்தவர். நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சி சார்பாக ராஜ்போரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 9 பெண் வேட்பாளர்களில்இவரும் ஒருவர். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் இம்மாநில தேர்தல் அரசியலில் முதல்முறையாக போட்டியிடும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் இவரே.

இது தொடர்பாக டெய்சி ரைனா கூறுகையில்: எங்கள் பஞ்சாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்த சட்டமன்ற தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். என் மூலமாக அவர்களது குரல்கள் ஒலிக்க வேண்டும் என்றார்கள். நான் பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பு வகித்தபோது இளைஞர்களை சந்தித்து உரையாடி அவர்களது பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயன்றேன்.

எந்த குற்றமும் இழைக்காதபோதும் பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் எங்கள் இளைஞர்கள். 1990களில் ஜம்மு காஷ்மீரில் பிறந்த இளையோர் தோட்டாக்களை மட்டுமே கண்டவர்கள். தேர்தலில் போட்டியிடுவது பற்றிநான் இத்தனை காலம் யோசிக்கவே இல்லை. ஆனால், நான் முதல்வரானால் ஒரேநாளில் புல்வாமா பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிடுவேன் என்று இளையோர் கூறுகின்றனர். காஷ்மீரில் வாழும் பிற மக்கள் எதிர்கொள்ளும் மற்ற சிக்கல்களைவிட 2019-ல் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுபோன்ற அதிபயங்கரமான தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பதற்றமான நிலப்பரப்பு புல்வாமா. இங்கு வந்த புதிலில் போலீஸ் பாதுகாப்பு இன்றிஊருக்குள் இயல்பாக நடமாடியதுண்டு.

இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்காக குளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தேன். முஸ்லிம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு இந்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் போனால் அவர்கள் கோபம் கொள்வார்கள் என்பதால் முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவலிங்கத்தை நிர்மாணித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE