ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் கர்னல் நகர மேயரும், சதவுரா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான ரேணு பாலாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.

முன்னதாக, இன்று (செப்.06) மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர். கடந்த புதன் (செப்.04) அன்று வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினர்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிவொன்றை வினேஷ் போகத் வெளியிட்டார். அதில் அவர், “எனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் இந்திய ரயில்வே பணியில் இருந்து என்னை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன். அதற்கான எனது ராஜினாமா கடிதத்தை சம்மந்தப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்திய ரயில்வேக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய இந்த வாய்ப்பினை வழங்கிய இந்திய ரயில்வே குடும்பத்துக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE