மாதபி புரி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மும்பையில் செபி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் செபிதலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் மீது, ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை செபி தலைவர் மறுத்தார்.

ஹிண்டன்பர்க் முன்வைத்த இந்த குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மாதபி புரி மீது எழுந்துள்ளது. அதாவது, மாதபி புரி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேல் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர்அவர்கள் கலைந்து சென்று தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.

செபி தலைவர் குறித்து அதன்ஊழியர்கள் மத்திய நிதியமைச்சகத்துக்கு நேற்றுமுன்தினம் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அதில், “செபி தலைவர் மாதபி புரி, செபி கூட்டங்களில் சத்தம் போடுவது, திட்டுவது, பொது இடத்தில் அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது. செபி தலைவர் மிகக் கடுமையான, தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். செபி ஊழியர்களின் நடவடிக்கைகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகிறது. மேலும், எட்டமுடியாத இலக்குகளை நிர்ணயித்து, பின்னர் இலக்குகளையும் மாற்றிவிடுகிறார். இதனால், ஊழியர்களின் மனநலன் பாதிக்கப்பட்டு, வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ரோபோக்கள் அல்ல. செபி நிர்வாகம் பிற்போக்குத்தனமான கொள்கைகளை அமல்படுத்தி யுள்ளது” என்று புகார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE