வீடியோ ஆதாரங்கள் வெளியானதன் எதிரொலி: பாலியல் புகாரில் சிக்கிய தெலுங்கு தேச எம்எல்ஏ சஸ்பெண்ட்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆதிமூலம் எம்எல்ஏ தன்னை திருப்பதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என, திருப்பதியை சேர்ந்த ஒரு பெண் செல்போன் வீடியோ ஆதாரங்களுடன் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அதன் தொடர்ச்சியாக, அந்த எம்.எல்.ஏ உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. இதில் 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராகி உள்ளார்.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தினால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சித்தூர் மாவட்டம், சத்யவேடு தொகுதியை சேர்ந்த ஆதிமூலம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. அதே சத்யவேடு தொகுதியில் ஆதிமூலம் இம்முறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று திருப்பதியை சேர்ந்த ஒரு பெண், ஹைதராபாத் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல பகீர் புகார்களை தெரிவித்தார். இது ஆந்திர அரசியலையே உலுக்கி உள்ளது. அந்த பெண் கூறுகையில், “நானும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவள் தான். திருப்பதி என்னுடைய சொந்த ஊராகும். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரச்சாரத்தின் போது, சத்யவேடு தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ ஆதிமூலம் திருப்பதியில் உள்ள ஒரு பிரபல விடுதியில் தங்கி இருந்துதான் பிரச்சாரம் செய்தார். அப்போது தான்அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் ஏற்பட்ட சில நாட்களிலேயே என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டார். அதன் பிறகு, அடிக்கடி போன் செய்தார். இரவில் அதிகமாக மெசேஜ் செய்தார். ஒரு நாள், என்னை உடனடியாக திருப்பதியில் அவர் தங்கி இருந்த அந்த பிரபல லாட்ஜுக்கு வரச்சொன்னார், நான்சென்றபோது, அவர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். எப்படியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு கட்டினேன். அதனால், நான் அவரது அறையில் என்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து அதன் மூலம் அவர் செய்யும் அட்டூழியத்தை பதிவு செய்தேன்.(அதனை ஊடகத்தினர் முன் காட்டினார்).

இது குறித்து நான் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது மகன் லோகேஷுக்கும் புகார் செய்துள்ளேன். இப்படி பட்டவர்கள் கட்சியில் இருப்பதால் அரசியலுக்கு வரவே பெண்கள் தயங்குவார்கள். இப்போது இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஆகவே பூனைக்கு யார் மணியை கட்டுவது என யோசிக்காமல் நானே முன்வந்து புகார் தெரிவித்தேன். உடனடியாக எம்.எல்.ஏ ஆதிமூலம் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தெலுங்கு தேசம்கட்சியின் ஆந்திர மாநில பிரிவின் தலைவர் பி. ஸ்ரீநிவாசராவ், சத்யவேடு எம்.எல்.ஏ ஆதிமுலத்தை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இது ஆந்திராவில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE