“நீதித் துறையில் புல்டோசர் கலாச்சாரத்துக்கு இடம் இல்லை” - உ.பி. காங்கிரஸ் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

லக்னோ: “உத்தரப் பிரதேசத்தில் உள்ள புல்டோசர் கலாச்சாரம் என்பது நீதித்துறைக்கு உகந்தது அல்ல. அது நிறுத்தப்பட வேண்டும்” என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வரின் இரும்புக்கரம் ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் புல்டோசர் கலாச்சாரம் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இடையே முரண்பாடன கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரின் இந்தக் கருத்து வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு புல்டோசர் பயன்படுத்துவது குறித்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இரண்டு தலைவர்களும் இவ்வாறு கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பை பாராட்டியுள்ள அஜய் ராய், சட்டத்தின் ஆட்சியை கட்டமாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின்படியே இருக்க வேண்டும். நீதித் துறையில் புல்டோசர்களுக்கு இடம் இல்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, 2027-க்கு பின்னர் முதல்வரின் சொந்த மாவட்டமான கோராக்பூருக்கு அனைத்து புல்டோசர்களையும் அனுப்புவேன் என்ற அகிலேஷ் யாதவின் கருத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்த யோகி ஆதித்யநாத், "எல்லோருக்கும் புல்டோசரை பயன்படுத்துவதற்கான மனம் இருப்பதில்லை. புல்டோசரும் எல்லோரின் கைகளுக்கும் வசப்பாடாது அதற்கு தைரியம் மற்றும் அறிவு இரண்டும் வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில்,"2027-ல் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அமைந்த உடன் மாநிலத்தில் உள்ள அனைத்து புல்டோசர்களும் கோராக்பூரை நோக்கி திருப்பிவிடப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் திங்கள்கிழமை வழக்கு விசாரணையின்போது, “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் சட்டத்தின் நடைமுறையைப் பின்பற்றாமல் அதனைச் செய்ய முடியாது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE