ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒருவர் பிஹாரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்: தேஜஸ்வியை விமர்சனம் செய்த பிரசாந்த் கிஷோர்

By செய்திப்பிரிவு

பாட்னா: ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒருவர் பிஹாரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார் என்று தேஜஸ்வி யாதவை பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தின் போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசும்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

எந்த வசதியும் இல்லாத சிலரால் கல்வி கற்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒருவரின் பெற்றோர் மாநில முதல்வராக இருந்தபோதும் அவரால் 10-ம் வகுப்பை கூட தாண்ட முடியவில்லை என்றால் என்ன சொல்வது? கல்வி மீதான அவர்களின் அக்கறையையே இது காட்டுகிறது. 9-ம் வகுப்பு தோல்வி அடைந்த ஒருவர் பிஹாரின் வளர்ச்சிக்கு வழி காட்டுகிறார். அவருக்கு ஜிடிபி-க்கும் ஜிடிபி வளர்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. அவர்தான் பிஹார் எப்படி வளர்ச்சி அடையும் என்று சொல்லப் போகிறாராம்.

முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் என்பதால் மட்டுமே அவர் ஆர்ஜேடி தலைவராக உள்ளார். தேஜஸ்வி தனது குடும்பப் பெயரைதாண்டி நற்பெயரைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைக்க வேண்டும். செயல்கள் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும். அரசுப் பணி தொடர்பான வாக்குறுதிகள் மூலம் மக்களைதேஜஸ்வி தவறாக வழிநடத்துகிறார். பிஹாரில் 23 லட்சம் அரசுஊழியர்கள் உள்ளனர். இது மாநிலமக்கள் தொகையில் 1.97 சதவீதம்ஆகும். தேஜஸ்வி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் 98 சதவீத மக்கள் பலனடைய மாட்டார்கள். சோஷலிசம் பற்றி தேஜஸ்வியால் 5 நிமிடம் கூட பேச முடியாது. இதுபோன்ற கருத்துகளை விவாதிக்க தேவையான புரிதல் அவருக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE