திருப்பதி கருட சேவையின்போது பைக்குகளுக்கு அனுமதி ரத்து

By என்.மகேஷ்குமார்


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான அக்டோபர் 4-ம் தேதி மாலை, ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது மனைவியுடன் தம்பதி சமேதராக பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளார். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான 8-ம் தேதி மாலை 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது.

இதில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையின்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், திருமலைக்கு பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது. அதாவது அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரைபைக்குகள் திருமலை செல்ல அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானை தரிசித்ததும், உடனடியாக லட்டு பிரசாதம் வாங்கவே அதிகம் ஆர்வம் காட்டுவர். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதிக கூட்டம் இருந்தால் சுவாமியை தரிசிக்க முடியாதவர்கள், கோயிலின் எதிரே ஆஞ்சனேயர் கோயில் முன் தேங்காய் உடைத்து விட்டு, நேர்த்திக் கடன் செலுத்தி விட்டு, லட்டு பிரசாதத்தை வாங்கி கொண்டு ஊர் திரும்புவது வழக்கம். ஆனால், தற்போது, சுவாமியை தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே, 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஒருவருக்கு 4 லட்டுகள் வீதம் வழங்கிய தேவஸ்தானம், இடைத்தரகர்களை கட்டுப்படுத்தவே இத்திட்டம் என அறிவித்துள்ளது. மேலும், லட்டுபிரசாதம் என்பது புனிதப் பிரசாதமாகும். இதனை சிலர் ஆயிரக்கணக்கிலும், நூற்றுக்கணக்கிலும் வாங்கிசென்று, தங்களது வீட்டு விசேஷநாட்களில் அவர்களின் உறவினர்களுக்கு வழங்குகின்றனர்.திருப்பதி லட்டு ஒன்றும் இனிப்பு பலகாரம் கிடையாது என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE