ஐசிஐசிஐ வங்கியிடமும் ‘செபி’ தலைவர் ஊதியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி பூரி புச், அரசாங்கத்திடம் இருந்து ஊதியம் பெறுவதோடு, ஐசிஐசிஐ வங்கியில் இருந்தும் சம்பளம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கெரா, "செபி அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மதாபி பூரி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார். ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இதன்மூலம், செபி அமைப்பின் விதி 54-ஐ அவர் மீறியுள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரும் முதலீடு செய்யும் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் பணியை செபி மேற்கொள்கிறது. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அடங்கிய குழுவால் செபி தலைவர் நியமிக்கப்படுகிறார். விதிகளை மீறி செயல்பட்டுள்ள செபி தலைவர் மதாபி பூரி புச் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

பவன் கெராவின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீண்ட காலமாக தன்னாட்சியுடனும் சுதந்திரமாகவும் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்களை உங்கள் நண்பர்களுக்கு உதவுவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக உங்களால் முடிந்தவரை நசுக்க முயற்சி செய்து வருகிறீர்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, ஆர்பிஐ, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியவற்றின் நியமனங்களில் இதனைப் பார்த்தோம். இப்போது செபியிலும் அதையே பார்க்கிறோம்.

எந்தவிதமான கவனமும் இல்லாமல் செபி தலைவரை உங்கள் விருப்பப்படி நியமித்தீர்கள். இது, செபியின் நற்பெயருக்கு கறையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, செபியின் நேர்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள சிறு மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களின் முதலீடுகளை பாதுகாக்கும் பொறுப்பு செபி-க்கு உள்ளது. எ

னவே, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். செபி தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதானி மெகா ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு, விசாரணை நடத்த வேண்டும். நரேந்திர மோடி - அமித் ஷா தலைமையிலான குழுவால் நியமிக்கப்பட்டவர் செபி தலைவர் என்பதால், இந்த புதிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE