சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை - உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார்.

அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர்இந்த மதிப்பெண் எடுத்து மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். நீட் மருத்துவத் தேர்வுக்காக குறிப்புகளை காகிதங்கள் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார் சன்னி குமார். இரவு முழுவதும் படிப்பு, காலையில் சமோசா கடையில் வேலை என்பதால் அவருக்குத் தூக்கமில்லாமல் கண்களில் வலிஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சன்னி குமார் கூறும்போது, “மருந்துகளை பார்க்கும்போது எனக்கு எம்பிபிஎஸ் படிப்பு படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பனை செய்வது எனது எதிர்காலத்தையும், படிப்பையும் பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன்’’ என்றார்.

சன்னி குமார் குறித்த வீடியோவை, அவரதுநண்பர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தைக் கவனித்துவந்த ‘பிஸிக்ஸ்வாலா’ என்ற நீட் தேர்வு பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அலேக் பாண்டே, சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ. 6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பிஸிக்ஸ்வாலா சிஇஓ அலேக் பாண்டே கூறும்போது, “சன்னிகுமார் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் சிறப்பு வாய்ந்தவை. அவர் ஓரு கடின உழைப்பாளி. பிஸிக்ஸ்வாலா நடத்தும் நீட் தேர்வு பயிற்சியை டெலிகிராம் ஆப் மூலம் படித்துள்ளார். அவருக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. அவர் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரியில் இணைந்து தனது கனவை நிறைவேற்றவேண்டும்” என்றார். சன்னிகுமாரின் வீடியோவைப் பார்க்கும் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE