பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்களை கைது செய்ய கேரள போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கேரள போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. நடிகைகளிடம் விசாரணை நடத்திய இந்த கமிட்டி, தனது அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்தது. சில ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ‘வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் சுரண்டலை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் மிரட்டப்பட்டு திரையுலகில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மலையாள திரையுலகம் சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் மீது புகார்: இந்த அறிக்கை வெளியான பிறகு, பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது சில நடிகைகள் புகார்களை கூறி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித் மீது மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார் தெரிவித்தார். இதனால், கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் விலகினார்.

மலையாள நடிகர் சங்கம் கலைப்பு: மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது, ரேவதி சம்பத் என்ற துணை நடிகை புகார் கூறினார். நடிகரும், கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உட்பட 6 பேர் மீது நடிகை மினு முனீர், பாலியல் புகார் கூறியிருந்தார். நடிகர்கள் பாபுராஜ், ரியாஸ் கான் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்த, மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் கூண்டோடுகலைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரளஅரசு அமைத்துள்ளது. விசாரணையை இந்த குழு தீவிரப்படுத்தியுள்ளது. பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் புகார்கள் கூறிய நடிகைகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட நடிகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிக்கியுள்ள நடிகர்கள், தங்கள் மீதானபுகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE