ஆர்எஸ்எஸ் 3 நாள் மாநாடு கேரள மாநிலத்தில் தொடக்கம்: சமூக சீர்திருத்தம், வங்கதேச விவகாரம் குறித்து ஆலோசனை

By செய்திப்பிரிவு

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள்மாநாடு கேரளாவில் நேற்று தொடங்கியது. இதில் சமூக சீர்திருத்தம், வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் கேரள மாநிலம் பாலக்காடு நகரில் நேற்று தொடங்கியது. தேசிய அளவிலான வருடாந்திர கூட்டம் கேரளாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் 6 இணைப் பொதுச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான விவரங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்தஉதவிகள் குறித்து எடுத்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.

நூற்றாண்டு விழா: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஓராண்டுக்கு நடைபெறவுள்ள சமூக சீர்திருத்தம் மற்றும் நாட்டை கட்டி எழுப்புவது தொடர்பான 5 முக்கிய திட்டங்கள் இதில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விரட்டப் பட்டதையடுத்து, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப் படும் தாக்குதல் குறித்தும் அங்குள்ள கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 2 தேர்தலைவிட இந்த முறை பாஜக குறைவான இடங்களில் வெற்றி பெற்றதற்கு, பாஜக, ஆர்எஸ்எஸ் இடையிலான மோதலே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE