இந்தியாவில் தீவிரவாத படை உருவாக்க சதி: என்ஐஏ தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத படை உருவாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக அஜீஸ் அகமது என்கிற நபர் தேசிய புலனாய்வு முகமையால் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஜீஸ் அகமது என்கிற ஜலீல் அஜீஸ் அகமது கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் தப்பியோட முயன்றபோது பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பின்தீவிர அடிப்படைவாத கொள்கையின் தாக்கத்தில் செயல்பட்டு வரும் 6 தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை கடந்த சில நாட்களாக தேடி வருகிறது. தாக்கி அல் தின் அல் நபனி என்கிற முஸ்லிம் அடிப்படைவாதியின் சித்தாந்தத்தைப் பின்பற்றி உலகெங்கிலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை நிலைநாட்டுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் நபர் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்த்துள்ளதாகவும், ‘இஸ்லாமிக் கிலாபத்’ என்கிற முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை இந்தியாவில் உருவாக்கும் நோக்கத்துடன் தீவிரவாத கொள்கையை பரப்பி வந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE