ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான, பாஜகவின் தேன்நிலவுக் காலம் 26 மாதங்கள் மட்டுமே நீடித்தது. முதல் மெகபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக இன்று அறிவித்தது.
கடந்த 10 ஆண்டுகளில் 4-வது முறையாக ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் சூழல் எழுந்துள்ளது.
87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன.
இதனால், யாருடன் சேர்ந்து யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால், ஏறக்குறைய 88 நாட்கள் ஆளுநர் ஆட்சி நடந்தது. காஷ்மீரில் பண்டிட்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், தீவிரவாதிகள் பூண்டோடு ஒழிக்கப்படுவார்கள் என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்த பாஜக, தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியை கடுமையாக விமர்சித்தது.
ஆனால், ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பலகட்ட பேச்சுக்குப்பின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. கொள்கை அளவில் எதிர்துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனையாகும்.
இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைந்தபின் மாநிலத்தில் அமைதி திரும்புமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு நிலைமை மிகவும் மோசமானது. துப்பாக்கிச்சூடுகள், தீவிரவாத தாக்குதல்கள், ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் போன்றவை அதிகரித்தன என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்தபின் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை கடந்த காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் 72 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சவுத் ஏசியன் டெரரிஸ் போர்ட்ல் குறித்து இந்தியா ஸ்பென்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 111 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 191 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதன்பின் பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைந்தபின்பும் இந்த தாக்குதல்கள் குறையவில்லை.
புனித ரமலான் மாதத்தில் ராணுவத்தினர் கடைபிடித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதற்கு மத்திய அரசும், பாதுகாப்பு துறை அமைச்சகமும் ஏற்கவில்லை, ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளும் ஏற்கமறுத்தவிட்டனர். மீண்டும் மிகப்பெரிய ஆப்ரேஷன் நடத்தினால்தான் தீவிரவாத தாக்குதல்கள் குறையும் என்ற கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டது.
பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி இருவரின் கொள்கைகளும், வாக்குறுதிகளும் வேறுபட்டவை. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானது பொது சிவில் சட்டம் கொண்டுவருவதும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதாகும். ஆனால், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைச் சட்டத்தை ஒருபோதும் ரத்து செய்ய விடமாட்டோம், அதேபோல அரசியலமைப்புச் சட்டம் 35ஏ ஆகியவையும் நீர்த்துப் போகச்செய்யமாட்டோம் என்று பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டே முதல்வர் மெகபூபா முப்தி பேசி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வந்த மெகபூபாமுப்தி, காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சிறப்பு அதிகாரச் சட்டத்தை(எப்எஸ்பிஏ) ரத்து செய்ய முயற்சிக்கிறேன் என்று தெரிவித்தார்.
தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என்ற முழக்கமிட்டு வரும் பாஜகவுக்கு மெகபூபா முப்தியின் செயல்பாடுகளும், பேச்சுகளும் அதிருப்தியையும், மனக்கசப்பையும் தந்திருக்க வேண்டும். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் முரண்பாடு இருந்து வந்தது.
சமீபக காலமாக மாநிலத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காதது, கதுவாவில் சிறுமி பலாத்காரத்தில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பிருப்பது, பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற காரணங்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்தது.
குறிப்பாக, காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளின் கடுமையான விமர்சனங்களைத் தவிர்க்கும் வகையிலும், இந்திய வீரர்கள் அதிகமான அளவில் உயிரிழந்திருக்கும் விஷயத்தைத் திசைதிருப்பும் வகையில், கூட்டணியில் இருந்து பாஜக விலகி இருக்கலாம்.
எதிர்வரும் 2019-ம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு, தனிச்சிந்தனையோடு ஒத்து இயங்கும் கட்சிகளை இணைக்கும் முடிவில் முதல்கட்ட நகர்வாக மெகபூபாவுடனான கூட்டணியை முறித்துள்ளது பாஜக.
ஜம்முகாஷ்மீரில் பாஜகவுக்குக் கூட்டணி ஆட்சியை இழப்பதால், பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படப்போவதில்லை. பாஜகவின் நோக்கம் அனைத்தும் மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டே காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும் என்பது காஷ்மீர் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
1. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அப்படி இருக்கும்போது, தற்போது பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆதலால், தேசிய மாநாட்டுக்கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியின் மெகபூபா முப்தியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
2. இரண்டாவதாக, சுயேட்சைகளின் ஆதரவுடன், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம்.
3. மூன்றாவதாக மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு காங்கிரஸ் கட்கிக்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டுக்கட்சிகள் ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு அளித்து மைனாரிட்டி அரசாகச் செயல்பட வைக்கலாம்.
4. இந்த 3 விஷயங்களும் நடக்காத நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago