நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள், அதன் நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய அழிவுகள் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தரமாக மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு, அதிலிருந்து உயிர்பிழைத்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் பலர் தங்களின் பழைய வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மேலும், பலர் வசிப்பதற்கு வேறு வீடு, நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலையுடன் உள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மேப்பாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ள புஞ்சிரிமத்தம், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் மறுகுடியமர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், முதல் இரண்டு கிராமத்தின் சில பகுதிகள் எதிர்காலத்தில் மக்கள் வசிக்க தகுதியற்றவைகளாக மாறலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.

இதேக் கவலையை பகிர்ந்து கொண்ட மற்றொரு மூத்த அதிகாரி, "நிலப்பரப்பு விரிவடைந்தது, பெரிய பெரிய பாறைகள், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களோடு ஓடி வந்த காயத்ரி நதி, அதன் பாதையில் இருந்த வீடுகள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்களை முற்றிலுமாக அழித்து, நிலப்பரப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட்டது" என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இதே கவலையைத் தெரிவிக்கின்றனர். புரிஞ்சிரிமட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ். 39 வயதான இவர், தனது வீட்டின் அருகில் இருந்த ஷெட் ஒன்றில் தையல் கடை நடத்தி வந்தார். தோட்டத் தொழிலாளர்களான தனது பெற்றோர் ஏழு ஆண்டுகளாக சேர்த்த சிறிய சேமிப்பில் கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய நிலையைப் பார்த்து மிகவும் வேதனை அடைகிறார்.

"என் வீடு முழுவதும் சகதியால் நிரப்பப்பட்டுள்ளதை என்னால் நம்பமுடியவில்லை. ஜன்னல்கள், கதவுகள் அனைத்து உடைந்து விட்டன. அன்று இரவு எனது வீட்டுக்கு அருகே இருந்த இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இனி மேலும் இங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் பலரும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கின்றனர். அரசு எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்" என்றார்.

முண்டக்கை பகுதியைச் சேர்ந்த 35 வயது லோடு ஆட்டோ ஓட்டுநரான உனைஸ், தனது ஹார்ட்வேர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மூட்டை சிமெண்ட் மற்றும் சில ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் அடித்துச்செல்லப்பட்ட வேதனையை பகிர்கிறார். “கடையுடன் அனைத்து சிமெண்ட் மூட்டைகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எனது கூடுதல் வருமானத் தேவைக்காக சமீபத்தில் தான் சிமெண்ட் விற்பனையை தொடங்கி இருந்தேன். நிவாரணம் கேட்டு அரசுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து பதில் வருவதற்காக நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

நடன ஆசிரியையான ஜிதிகா ப்ரேம் கூறுகையில், "விதியால் ஆட்கொள்ளப்பட்ட அன்றைய இரவு நேர நிலச்சரிவு கோரங்களை பார்க்கும்போது, ஒரு பயங்கரமான திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது என்றார். தன் குடும்பத்துக்கும், தனது அண்டை வீட்டார் குடும்பத்துக்கும் என்ன நேர்ந்தது என்பதை நினைக்கும்போது மனச்சோர்வடையும் அவர், திரும்பி அங்கே போக விரும்பவில்லை என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் மீண்டும் அங்கே போக வேண்டிய தேவை இருக்காது என்று நம்புகிறேன். என்னால் அங்கு வாழ முடியாது. எங்களுக்கு ஒரு சரியான பொது போக்குவரத்து கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன்மூலம் வெள்ளார்மலையில் இருக்கும் எனது பள்ளிக்குச் சென்று என் மாணவர்களுடன் என்னால் இருக்க முடியும். தற்போது கல்பெட்டாவில் நான் தங்கியிருக்கும் தற்காலிக வீடு உள்ளூர் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE