“தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வளர்ச்சிக்கு முன்னுரிமை” - ‘வந்தே பாரத்’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நவீனமயமாக்கப்பட்டு வரும் இந்திய ரயில்வேயின் புதிய முகமாக வந்தே பாரத் ரயில்கள் திகழ்கின்றன என 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்துக் கூறினார்.

மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில், மீரட் - லக்னோ ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது 2 மணி நேர பயணத்தை மிச்சப்படுத்தும். இதேபோல், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிட பயணத்தையும், மீரட் - லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில் சுமார் 1 மணி நேர பயணத்தையும் மிச்சப்படுத்தும்.

வந்தே பாரத் ரயில்களை துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய வளர்ச்சிப் பயணத்தில் மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில், மீரட் - லக்னோ வந்தே பாரத் ரயில்கள் என இன்று புதிய அத்தியாயத்தைக் காண்கின்றன. வந்தே பாரத் ரயில்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் காரணமாக தேசம், வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

கோயில் நகரமான மதுரை, இப்போது ஐடி சிட்டி பெங்களூருடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகை காலங்களில் இது இணைப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னை - நாகர்கோவில் வழித்தடமானது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கப்பட்ட இடங்களில் சுற்றுலா வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நிறைவேற்ற தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி இன்றியமையாதது. தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை. ரயில்வேயின் வளர்ச்சிப் பயணம் அரசின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு. 2014ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, அதைவிட 7 மடங்கு அதிகமாக இந்த ஆண்டு தமிழகத்தின் ரயில் பட்ஜெட்டுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் மொத்த வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்கிறது. இதேபோல், 2014 ஆம் ஆண்டை விட 9 மடங்கு அதிகமாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் கர்நாடகாவிற்கு ரூ. 7,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று 8 வந்தே பாரத் ரயில்கள் கர்நாடகாவை இணைக்கின்றன.

வந்தே பாரத் இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலின் புதிய முகம். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு வழித்தடத்திலும் வந்தே பாரதத்திற்கான கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. அதிவேக ரயில்களின் வருகையானது மக்கள் தங்கள் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதோடு அவர்களின் கனவுகளையும் விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்று, நாடு முழுவதும் 102 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்கள் வந்தே பாரத் ரயில்களின் வெற்றிக்கான ஆதாரம் மட்டுமல்ல, இவை இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் கனவுகளின் சின்னம்.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில், ரயில்வே கட்டமைப்பை நவீனமாக்குவது மிகவும் முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டே, ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், மின்மயமாக்குதல், புதிய ரயில்களை இயக்குதல் மற்றும் புதிய வழித்தடங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பழைய பிம்பத்தை மாற்ற அரசு உயர் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைத்து வருகிறது. வந்தே பாரத் உடன் அமிர்த பாரத் ரயில்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக நமோ பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்குள் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சமாளிக்க வந்தே மெட்ரோ விரைவில் தொடங்கப்படும்.

இந்திய நகரங்கள் எப்போதும் அவற்றின் ரயில் நிலையங்களால் அடையாளம் காணப்படுகின்றன. அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் மூலம், ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, நகரங்களுக்கு புதிய அடையாளத்தை வழங்குகின்றன. நாட்டில் உள்ள 1300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, விமான நிலையங்களைப் போல் காட்சி அளிக்கின்றன. மிகச்சிறிய ரயில் நிலையங்கள் கூட அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே, சாலைகள் மற்றும் நீர்வழிகள் போன்ற இணைப்புக் கட்டமைப்புகள் வலுப்பெறும் போது, ​​நாடு வலுப்பெறுகிறது. ஏழைகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வகுப்பினராக இருந்தாலும் சரி, நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு அவை நன்மை பயக்கின்றன. மருத்துவமனைகள், கழிப்பறைகள் மற்றும் வீடுகள் ஆகியவை சாதனை எண்ணிக்கையில் கட்டப்படுவதால் ஏழைகளும் நாட்டின் வளர்ச்சியின் பயனைப் பெறுகிறார்கள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புகள் வளரும்போது, ​அவை இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற பல முயற்சிகளால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

பல பத்தாண்டுகளாக இருந்து வரும் பிரச்னைகளைத் தீர்க்கும் நம்பிக்கையை உயர்த்த ரயில்வே கடுமையாக உழைத்துள்ளது. இந்த திசையில் இந்தியா செல்ல நீண்ட தூரம் உள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும் இந்திய ரயில்வே ஒரு வசதியான பயணத்தை உறுதி செய்யும் வரை அதற்கான பணிகள் நிற்காது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களுக்காக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்