அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கான தொழுகை நேரம் ரத்து: ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்பு

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் பல ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை தொழுகை நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அசாம் சட்டப்பேரவை விதிகள் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அசாம் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது முதல், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்கு செல்வதற்காக பேரவை அமர்வு காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவது வழக்கம். அவர்கள் தொழுகை முடித்து வந்தபிறகு மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் அவை தொடங்கும். மற்ற நாட்களில் இதுபோன்ற எந்தவித ஒத்திவைப்பும் இன்றி அவை நடக்கும்.

நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு அசாம் பேரவை முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்கு செல்வதற்காக எந்தவித ஒத்திவைப்பும் இல்லாமல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2 மணி நேர ஜும்மா இடைவேளையை ரத்து செய்வதன் மூலம், அசாம் சட்டப்பேரவை உற்பத்தித் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றொரு காலனித்துவ சுமையை இறக்கி வைத்துள்ளது. இந்த நடைமுறை 1937ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கின் செய்யது சாதுல்லாவால் கொண்டு வரப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

அசாம் சட்டப்பேரவை கமிட்டியின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முன்னதாக, அசாம் சட்டப்பேரவையில் ‘முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் கட்டாயப் பதிவு மசோதா’ கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஜோகன் மோகன் இதனை அறிமுகம் செய்தார். இரு தரப்பினரின் அனுமதியின்றி நடைபெறும் திருமணம் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று அசாம் அரசு கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE