யாசகர்களுக்கான மறுவாழ்வு - தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 'யாசகத்தை தடுத்தல், யாசகர்களின் மறுவாழ்வு' என்ற தலைப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 'யாசகத்தை தடுத்தல், யாசகர்களின் மறுவாழ்வு' என்ற தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் வளாகத்தில் இன்று (30.08.2024) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவர் விஜயபாரதி சயானி, "விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, மத்திய - மாநில அரசுகளால் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், யாசகம் செய்யும் பழக்கம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது கவலை அளிக்கிறது. இது ஆழமான சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாசகர்கள் நாடோடிகளாக உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் முதியவர்கள் அடங்குவர். இவர்கள் உயிர்வாழ்வதற்காக யாசகம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சிலசமயங்களில் சமூகப் புறக்கணிப்பின் விளைவாக, மாற்றுத்திறனாளிகள் உயிர்வாழ்வதற்கும் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய நபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் கண்ணியத்துடனும் நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் ஆணையம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் பாரத் லால், "யாசகம் செய்யும் சூழலை நீக்கி, அதில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட உத்திகளை உருவாக்குமாறு மத்திய, மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு ஆணையம் சமீபத்தில் ஆலோசனை வழங்கியது. கடந்த சில ஆண்டுகளில், மக்களின் வாழ்க்கைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்த அரசு உறுதிபூண்டு செயல்படுகிறது. தண்ணீர், வீட்டுவசதி, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்ய கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் கிடைக்கும் சூழலில், யாசகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4 லட்சம் நபர்களின் மறுவாழ்வு கடினம் அல்ல. சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து செயல்பட்டால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது கடினமாக இருக்காது. ஆதார் அட்டையை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் உணவு தானியங்கள், வீட்டுவசதி, மின்சார இணைப்புகள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு ஆகியவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த விவாதத்தின் கண்ணோட்டத்தை வழங்கிய இணைச் செயலாளர் தேவேந்திர குமார் நிம், "தற்போதுள்ள சட்டங்கள், அணுகுமுறைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அரசியலமைப்பு கொள்கைகள், சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏற்ப, தண்டனை நடவடிக்கைகளிலிருந்து மறுவாழ்வில் கவனம் செலுத்துவதாக அது அமைய வேண்டும்" என்று கூறினார்.

தேசிய மனித உரிமைகள் ஆணைய சட்டப் பிரிவுப் பதிவாளர் ஜோகிந்தர் சிங், பிஹார் அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பிரதிநிதி, ராஜஸ்தான் அரசுப் பிரதிநிதி, தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசுப் பிரதிநிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக நல வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்