ஜப்பான் தற்காப்பு கலை அகிடோ, ஜியு-ஜிட்சுவில் ‘பிளாக் மற்றும் புளூ பெல்ட்’ வாங்கிய ராகுல்: 8 நிமிட வீடியோவை வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டு கூறியதாவது:

இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் மேற்கொண்ட பாரத் ஜோடோயாத்திரையின் போது, தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டேன். விரைவில் பாரத் டோஜோ (தற்காப்புக் கலை அரங்கம் அல்லது பள்ளி) யாத்திரை வரும். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் தங்கியிருக்கும் இடத்தில் மாலை வேளையில் தினமும் ‘ஜியு-ஜிட்சு’ என்ற ஜப்பானிய தற்காப்புக்கலை பயிற்சியில் ஈடுபடுவேன். இது தினசரி வழக்கமாகி விட்டது.உடலை நன்கு வைத்துக் கொண்டால் தான் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மொத்தம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், இளம் மாணவர்களுக்கு தற்காப்புக் கலையின் நுட்பங்களை ராகுல் காந்தி கற்றுக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜப்பான் நாட்டின் தற்காப்புக் கலைகளான அகிடோவில் ‘பிளாக் பெல்ட்’ மற்றும் ஜியு-ஜிட்சுவில் ‘புளூ பெல்ட்’ வாங்கியிருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல்மேலும் கூறும்போது, ‘‘தியானமும்கலந்தது போன்ற மென்மையான தற்காப்புக் கலையின்அழகை இளம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்’’ என்று கூறியுள்ளார்.

“தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், எங்கள் அனுபவத்தை எடுத்து சொல்லவும் விரும்புகிறேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE