குட்டி இங்கிலாந்து: கோலார் தங்கவயலில் பெங்களூருவின் குப்பைகளை கொட்டுவதற்கு தமிழர்கள் எதிர்ப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூரு மாநகரின் குப்பைகளை கோலார் தங்கவயலில் கொட்டுவதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குட்டி இங்கிலாந்தாக திகழ்ந்த தங்கவயலை குப்பை நகரமாக மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஜான் டெய்லர் 1880-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கசுரங்கம் அமைத்தார். இதில் பணியாற்றுவத‌ற்காக வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட‌ங்களில் இருந்து லட்சக் கணக்கான தமிழர்கள் அழைத்துவர‌ப்பட்டனர். அங்கு 800 டன் தங்கம் வெட்டி எடுத்ததால் தங்கவயல் ஆசியாவின் பெரிய தொழில் நகரமாக மாறியது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, கோலார் தங்கவயலில் அனைத்துவிதமான‌ நவீன வசதிகளும் நிறைந்திருந்ததால் ‘குட்டி இங்கிலாந்து’ என அழைக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக செயல்பட்ட தங்கசுரங்கம் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி, 2001-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் சுரங்க நிர்வாகத்தின் நிலம் பாழடைந்து கிடப்பதுடன், தங்கவயலின் வளர்ச்சியும் தடைப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசு பெங்களூரு மாநகரின் குப்பைகளை காலியாக கிடக்கும் கோலார் தங்கவயலில் கொட்ட முடிவெடுத்துள்ளது. இதற்காக தங்க சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கோலார் மாவட்ட ஆட்சியர் அக்ரம் பாஷா மூலம் குப்பை கொட்டும் இடத்தை கண்டுள்ளனர். இதையடுத்து அக்ரம் பாஷா தங்க‌வயல் வட்டாட்சியர் நாகவேணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வையிட்டார்.

இதுகுறித்து கோலார் மாவட்ட ஆட்சியர் அக்ரம் பாஷா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், “இந்தியாவின் சிலிக்கான் வேலியாக திகழும் பெங்களூருவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது குப்பை பிரச்சினைதான். தினசரி 3500 டன்குப்பை மாநகராட்சி மூலம் சேகரிக்கப்படுகிறது. இதனை கொட்டுவதற்கு போதிய இடம் கிடைக்காமல் பெங்களூரு மாநகராட்சி திணறி வருகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் கோலார்தங்கவயல் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமாக 15 ஆயிரம் ஏக்கர் நிலம்இருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது. அங்கு 300 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து பெங்களூருவின் குப்பைகளை கொட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அந்த இடத்தை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு பெங்களூரு சென்னை இடையேயான புதிய விரைவுநெடுஞ்சாலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சாலையில் பயணித்தால் குப்பைகொட்டும் இடத்தை 1 மணி நேரத்திற்குள் அடைந்துவிடலாம். இந்த இடத்துக்கு கோலார் மாவட்ட நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதிக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

தங்கம் விளைந்த பூமி: இதுகுறித்து தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன் கூறுகையில், “தங்கம் விளைந்த பூமியில் குப்பை கொட்டுவதை ஏற்க முடியாது. அவ்வாறு குப்பை கொட்டினால் இந்தஊரின் பெருமை எல்லாம் அழிக்கப்பட்டு, பின்னர் குப்பை வயல் என அழைக்கப்படும் நிலை ஏற்படும். ஆசியாவின் மிக பெரிய தொழில் நகரமாக திகழ்ந்த இந்த ஊரை, குப்பை நகரமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது.

தங்கவயலில் திரும்பிய பக்கமெல்லாம் மலை போல சயனைடு மண் குவிக்கப்பட்டிருக்கிறது. அதில் சில நூறுடன் தங்கம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு குப்பை கொட்டினால் அந்த தங்க‌ மண் திருடு போகும்அபாயமும் இருக்கிறது. சுரங்கத்திற்குள் இருக்கும் கனிம வளங்களும் களவு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

இங்கு குப்பை கொட்டுவதால் உண்டாகும் சுற்றுச்சூழல் தீமைகளால் மக்களுக்கும் பிற‌ உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூடங்குளம் அணுக்கழிவுகளை இங்கு கொட்டுவதாக அறிவித்தார்கள். அப்போது மக்கள் எதிர்ப்பு வெடித்ததால் அந்த முடிவுகைவிடப்பட்டது. தற்போது பெங்களூருவின் குப்பையை கொட்டுவதற்கும் மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்”என வலியுறுத்தினார்.

அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு: கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு கோலார் தங்கவயலில் உள்ள தமிழ் அமைப்பினரும், தொழிலாளர் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக, இந்திய குடியரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பெரும்பாலான கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோலார் தங்கவயல் எம்எல்ஏ ரூபகலா கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேச இருக்கிறேன். அரசின் இந்த முடிவை கைவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்”என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE