ஆபரேஷன் பேடியா: உ.பி.யில் 7 பேரைக் கொன்ற ஓநாய்களில் ஒன்றைப் பிடித்த வனத்துறை!

By செய்திப்பிரிவு

பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றுவிட்டு, 15 பேரை காயப்படுத்திய ஓநாய்களில் ஒன்றை வனத் துறையினர் வியாழக்கிழமை பிடித்துள்ளனர்.

மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓய்நாய்களைப் பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற ஒன்றை தொடங்கி இருந்தது. இன்று பிடிபட்ட ஓநாயுடன் வனத்துறையினர் இதுவரை நான்கு ஓநாய்களைப் பிடித்துள்ளனர். இது குறித்து ஆபரேஷன் பேடியாவின் பொறுப்பாளரான பராபங்கி பிராந்திய வனத்துறை அதிகாரி, ஆகாஷ்தீப் பதவான் கூறுகையில், "சிசாய்யா சூடாமணி கிராத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் இன்று காலை ஆண் ஓநாய் ஒன்று பிடிபட்டது. அது முழு வளர்ச்சி அடைந்த ஆண் ஓநாய் ஆகும்" என்று தெரிவித்தார்.

பஹ்ரைச்சியில் கடந்த 45 நாட்களில் ஆறு குழந்தைகள், ஒரு பெண் ஆகிய ஏழு பேரை ஓநாய்கள் கடித்து கொன்றுள்ளன. கடைசி தாக்குதல் சம்பவம் திங்கள்கிழமை இரவு கிராமம் ஒன்றில் நடந்தது. இந்த ஓநாய் கூட்டத்தைப் பிடிப்பதற்காக ட்ரோன் கேமராக்கள் மற்றும் தெர்மல் ட்ரோன் மேப்பிங் தொழில் நுட்பங்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வனவிலங்குகளைப் பிடிப்பதற்கான அனுமதி, தலைமை வனக்காப்பாளரால் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வனத்துறையின் கூற்றுபடி, இந்தப் பகுதியில் எவ்வளவு ஓநாய்கள் உள்ளது என்று நிச்சயமாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, முதன்மை தலைமை வன பாதுகாவலர் (வனவிலங்கு) சஞ்சய் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை கூறுகையில், "ஓநாய்களைப் பிடிக்க 16 குழுக்கள் களத்தில் உள்ளன. மாவட்ட அளவிலான அதிகாரிகள் 12 பேர் அங்கு உள்ளனர். கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ரேணு சிங், மீதமுள்ள ஓநாய்களைப் பிடிக்கும் வரையில் களத்திலேயே இருப்பார்" என்று தெரிவித்திருந்தார்.

ரேணு சிங் வியாழக்கிழமை கூறுகையில், "நீண்ட நாட்களாக இங்கு ஓநாய்கள் பயம் இருந்து வந்தது. இன்று நாங்கள் ஒரு ஓநாயைப் பிடித்துள்ளோம். அதனை உயிரியல் பூங்காவுக்கு மாற்றுவோம். இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்டுள்ளன. இன்னும் இரண்டு ஓநாய்கள் மீதமுள்ளன. அவற்றையும் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE