‘மேற்கு வங்கத்தை நீங்கள் எரித்தால், பதிலுக்கு...’’ - மம்தா பேச்சுக்கு எதிராக போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து ஆத்திரமூட்டும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் வினீத் ஜிண்டால் தாக்கல் செய்த புகார் மனுவில், "திரிணமூல் மாணவர் அமைப்பின் நிறுவன விழாவில் நேற்று (புதன்கிழமை) பேசிய மம்தா பானர்ஜி, “பெங்கால் எரிந்தால், அசாம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகியவையும் எரியும்" என்று தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்தப் பேச்சு, பிராந்திய வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டக்கூடியது. இது தேசிய நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக உள்ளது. முதல்வராக மம்தா பானர்ஜியின் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை. மேலும், அவரது கருத்துகள் ஆபத்தானவை. நான் டெல்லியில் வசிப்பவன். மம்தா பானர்ஜி தனது பேச்சில், டெல்லியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களிடையே வெறுப்பையும் பகைமையையும் வளர்க்கும் மம்தா பானர்ஜியின் பேச்சு, தூண்டக் கூடியதாகவும், ஆத்திரமூட்டக் கூடியதாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மம்தா பானர்ஜிக்கு எதிராக பிஎன்எஸ் பிரிவுகள் 152, 192, 196 மற்றும் 353 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் (ஆக. 27) மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் தெரிவித்து நேற்று பாஜக சார்பில் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

திரிணமூல் மாணவர் அமைப்பு நிறுவன தின விழாவில் நேற்று பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பொறுப்புக் கூறுவதை இந்த முறை ஆளுநர் தவிர்க்க முடியாது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று எனது அரசு விரும்புகிறது. நேற்று (ஆக.27) தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொள்வதில் மாநில காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் தங்கள் ரத்தத்தை கொடுத்தார்கள். ஆனால் பாஜகவின் சதி வெற்றிபெறும் வகையில் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை.

மேற்கு வங்கத்தை சிலர் வங்கதேசம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் வங்கதேசத்தை நேசிக்கிறேன். அவர்கள் எங்களைப் போன்றே பேசுகிறார்கள். எங்கள் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேசம் தனி நாடு. இந்தியா தனி நாடு. மேற்கு வங்கம் பற்றி எரிய பிரதமர் மோடி தனது கட்சியைப் பயன்படுத்துகிறார். நீங்கள் மேற்கு வங்கத்தை எரித்தால், அசாம், வடகிழக்கு, உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகியவையும் எரிக்கப்படும். உங்கள் நாற்காலி கவிழ்க்கப்படும்" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்