ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு: விமர்சித்த பிரகாஷ் ராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

“போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து ஜெய் ஷாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அந்த பதிவில் இதனை தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பேற்று கொள்கிறார்.

மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE