ரூ.873 கோடி மதிப்புக்கு 73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவிடமிருந்து 73,000 துப்பாக்கிகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.837 கோடி ஆகும்.

இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதையடுத்து, அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து 73,000 எஸ்ஐஜி-716 ரோந்து ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ளது. இது,7.62X51 எம்எம் காலிபர் துப்பாக்கிகள். இதனைக் கொண்டு 500 மீட்டர் வரை துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பட்டாலியன்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.837 கோடி. இந்த திட்டத்துக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர்மாதத்திலேயே ஒப்புதல் அளித்துவிட்டது.

ரஷ்யாவின் ஏகே-203 கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, ஏற்கெனவே ரூ.647 கோடிமதிப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டு 72,400 எஸ்ஐஜி 716 ரகதுப்பாக்கிகள் பாதுகாப்பு படைக்குவாங்கப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் கொள்முதல் செய்யப்பட்ட 72,400 துப்பாக்கிகளில் ராணுவத்துக்கு 66,400, விமானப் படைக்கு 4,000 மற்றும் கடற்படைக்கு 2,000 என பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE