பாகிஸ்தானில் இருந்து வந்த கிறிஸ்தவருக்கு குடியுரிமை: சிஏஏ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது

By செய்திப்பிரிவு

பனாஜி: புதிதாகக் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் பாகிஸ்தானிலிருந்து வந்த கிறிஸ்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக கோவாவைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் பெரைரா என்பவர் பாகிஸ்தானுக்கு படிப்பதற்காக சென்றார். அவர் படித்துமுடித்த பின்னர் பாகிஸ்தான் குடியுரிமையைப் பெற்று அங்கேயே வேலை பார்த்து வந்தார். கராச்சியில் வசித்து வந்த அவர் 2013-ல் இந்தியாவுக்குத் திரும்பி கோவாவில் வசித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் சிஏஏ சட்டத்தின் கீழ் தனக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.

கோவாவைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்திருந்ததால் அவருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது சிக்கல்கள் தீர்ந்த நிலையில் நேற்று ஜோசப் பிரான்சிஸ் பெரைராவுக்கு இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான சான்றிதழை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வழங்கினார். சிஏஏ சட்டத்தை 2019-ல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்தது. இதன்படி 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின் மதத்தவர், புத்த மதத்தவர், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.

தற்போது ஜோசப் பிரான்சிஸ்பெரைரா, கேன்சுவாலிம் கிராமத்தில் குடும்பத்தாருடன் வசித்துவருகிறார். இதன்மூலம் சிஏஏ சட்டத்தீன் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற்ற முதல் கோவாவாசி என்ற பெருமையை பெரைரா பெற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE