ஜன் தன் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யடுத்து, இத்திட்டத்தின் பயனாளி கள் மற்றும் இதை வெற்றிபெறச் செய்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடிபொறுப்பேற்ற பிறகு, குறைந்தபட்சம் குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் (பிரதமரின் ஜன் தன் யோஜனா) கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப் பட்டது.

இதில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன்மூலம் கடன், காப்பீடு உள்ளிட்ட வசதிகளையும் பயனாளிகள் பெற முடியும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

இன்று (நேற்று) நாம் ஒருமகத்தான தினத்தை கொண்டாடுகிறோம். அதுதான் ஜன் தன் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு. பயனாளிகளுக்கும் இந்த திட்டம்வெற்றிபெற பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையை ஊக்குவிக்கவும் கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்பு நிலை சமுதாயத்தினருக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன் தன் திட்டம் முக்கிய பங்காற்றியது. மேலும் இந்த திட்டம் அதிகாரம் மற்றும் வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையின் கீழ் சுமார் 80% பெண்களை கொண்டுவர ஜன் தன் திட்டம் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. குறிப்பாக கடந்த 2011-ல் வெறும் 26% பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. இது 2021-ல் 78% ஆக அதிகரித்தது.ஜன் தன் திட்டத்தின் கீழ் இதுவரை 53.13 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் பெண்கள் பெயரில் உள்ள கணக்குகள் எண்ணிக்கை 30 கோடிக்கும் அதிகம். ஜன் தன் கணக்கு வைத்திருப்போரில் 35 கோடிக்கும் அதிகமானோர் ஊரகம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இப்போது நகர்ப்புற மக்களுக்கு இணையாக (95%) கிராமப்புற மக்களிடமும் (96%) வங்கிக் கணக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகராக பெண்களிடமும் இப்போது வங்கிக் கணக்குகள் உள்ளன.

ஜன் தன் திட்ட பயனாளிகளில் இதுவரை 36.13 கோடி பேருக்குஎவ்வித கட்டணமும் இல்லாமல்ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.10 ஆயிரம் வரை ஓவர்டிராப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜன் தன் திட்டம் பல்வேறு மக்கள்நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அடித்த ளமாக உள்ளது. குறிப்பாக கரோனா பெருந்தொற்று கால நிதியுதவி, விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்ட நிதியுதவி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் ஆகியவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுதவிர ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை செயல்படுத்தவும் இது உதவுகிறது.

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.2.31 லட்சம் கோடி இருப்பு உள்ளது. இந்தக் கணக்குகளில் அதிக அளவில் இருப்பு இருக்கும் மாநிலங்களில் மது, புகைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக கடந்த 2021-ல் எஸ்பிஐ வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையில் சீனாவையே இந்தியா மிஞ்சிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2011-ல் இந்திய மக்களில் 35% பேர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தனர். இது 2021-ல் 78 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் பாராட்டு: அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவை வழங்குவதில் ஜன் தன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக உலக நாடுகள் பாராட்டி உள்ளன. கடந்த ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஜி20 அறிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவை இலக்கை வெறும் 6 ஆண்டுகளில் இந்தியா எட்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்த இலக்கை எட்ட 47 ஆண்டுகள் ஆகி இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE