மேற்கு வங்கத்தில் முழு அடைப்பால் இயல்புநிலை பாதிப்பு: பாஜக நிர்வாகியின் கார் மீது துப்பாக்கிச்சூடு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக அழைப்பு விடுத்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்து முடங்கியது. பாஜக மூத்த தலைவர் பிரியங்கு பாண்டேவின் கார் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில், அவரது கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் நேற்றுமுன்தினம் தலைமைச் செயலகம்நோக்கி பேரணி சென்றனர். மாணவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் நேற்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது.இந்த போராட்டத்தால் மாநிலத் தின் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் ரயில், சாலை மறியல் போராடங்களில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தலைநகர் கொல்கத்தாவில் வழக்கத்தைவிட குறைந்த வாகனங்களே இயங்கின. சந்தைகள், கடைகள் திறந்திருந்தன. பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் இயங்கினாலும் வருகைப் பதிவு குறைவாக இருந்தது. மாநிலம்முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் மற்றும் திரிணமூல் கட்சியினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பட்பரா நகரில் பாஜக மூத்த தலைவர் பிரியங்கு பாண்டேவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பட்பரா நகரில் பாஜக தலைவர் பிரியங்கு பாண்டேவின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கார் கண்ணாடி சேதமடைந்துள்ளது.படம்: பிடிஐ

இதுகுறித்து அவர் கூறும்போது, “எங்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சிங் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். பட்பரா நகராட்சி பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், காரை நிறுத்தியதும் சுமார் 50 பேர் என் கார் மீது தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இது திரிணமூல் கட்சியினர் மற்றும் போலீஸாரின் கூட்டு சதி. எனக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த சம் பவம் நடந்துள்ளது” என்றார்.

இந்த தாக்குதலில், அவரது கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தனது சமூக வலைதளப் பதிவில், ‘பட்பராவில் பாஜக தலைவர் பிரியங்கு பாண்டேவின் வாகனம் மீது திரிணமூல் காங்கிரஸ் குண்டர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் வாகன ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். மம்தா பானர்ஜியும் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவை போராட்டத்தை நோக்கி தள்ளுவதையே இது காட்டுகிறது. மக்கள் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போலீஸார் - திரிணமூல் குண்டர்களின் விஷகூட்டணியால் பாஜகவை அச்சுறுத்த முடியாது’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE