புதுடெல்லி: “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக அறைகூவல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்புக் கட்டுரை ஒன்றை அளித்துள்ளார்.
அந்தக் கட்டுரையில் அவர், “பெண்களுக்கு எதிரான வக்கிரமான குற்றச் செயல்களில் இருந்து இந்தியா விழித்தெழ வேண்டும். ஆற்றல், திறன், அறிவாற்றல் ஆகியவற்றில் பெண்கள் குறைந்தவர்கள் என்ற சமூக மனநிலையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் பெண்களை ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள். பெண்கள் அச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதற்கான அவர்களின் பாதையில் இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அச்சத்தைத் தரக்கூடியது. இந்தச் சம்பவம், பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான குற்றங்களின் ஒரு பகுதியாக இருப்பது இன்னும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மகள்கள் மற்றும் சகோதரிகள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது. தேசம் சீற்றத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது; நானும் அப்படித்தான். மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தியபோதும், மற்ற இடங்களில் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மழலையர் பள்ளி சிறுமிகளும் அடங்குவர்.
ரக்ஷா பந்தன் அன்று பள்ளிக் குழந்தைகளை நான் சந்தித்தேன். அப்போது, 2012 டிசம்பரில் டெல்லியில் பிசியோதெரபி பயிற்சியாளர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு, 'எதிர்காலத்தில் நிர்பயா மாதிரி சம்பவம் மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்க முடியுமா' என்று அவர்கள் அப்பாவித்தனமாக என்னிடம் கேட்டார்கள்.
நிர்பயா சம்பவத்தை அடுத்து நாடு சீற்றமடைந்து, திட்டங்களையும், உத்திகளையும் வகுத்தது. அந்த முயற்சிகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின. கடந்த 12 ஆண்டுகளில் அதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்துவிட்டன. ஒரு சில சம்பவங்களே நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தச் சம்பவங்களில் இருந்து நாம் நமக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டோமா? போராட்டங்கள் நின்றதை அடுத்து இதுபோன்ற சம்பவங்களை சமூகம் தனது நினைவுகளில் இருந்து புதைத்துவிட்டது. மற்றொரு கொடூரமான குற்றம் நடந்தால் மட்டுமே அது மீண்டும் நினைவுகூரப்படும்.
பெண்களின் உரிமைகள் பற்றி ஒரு விரிவான பார்வை தேவை. பெண்கள் சிறு சிறு வெற்றியைக் கூட மிகப் பெரிய போராட்டத்தின் மூலமே அடைய வேண்டி உள்ளது. பெண்களின் உரிமைகள் விரிவுபடுவதை சமூகங்களில் நிலவும் தவறான எண்ணங்கள், சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் எப்போதும் எதிர்க்கின்றன. இது மிகவும் கேவலமான மனநிலை. இந்த மனநிலை பெண்ணை ஒரு குறைந்த மனிதனாக, குறைந்த சக்தி வாய்ந்தவராக, குறைந்த திறன் கொண்டவராக, குறைந்த புத்திசாலியாக பார்க்கிறது. இந்த மனநிலையை எதிர்கொள்வது அரசு மற்றும் சமூகம் ஆகிய இரண்டுக்கும் ஒரு பணியாகும்.
சட்டங்களும், சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் இருக்கின்றன. எனினும், ஏதோ ஒன்று தொடர்ந்து வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. கடந்த காலங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களால் அடிக்கடி மனம் வேதனைப்படுகிறது. வரலாற்றை எதிர்கொள்ள அஞ்சுபவர்கள், தீக்கோழி போன்று தங்கள் தலையை மணலில் புதைத்துக்கொண்டு "கூட்டு மறதியை" நாடுகிறார்கள். இப்போது வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம் ஆன்மாக்களுக்குள் தேடுவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் வேண்டி உள்ளது.
இந்த வக்கிரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் விரிவான முறையில் இதனை நாம் கையாள வேண்டும். கடந்த காலத்தில் நமது தோல்விகளை நினைவுபடுத்தவும், எதிர்காலத்தில் இன்னும் விழிப்புடன் இருக்க நம்மைத் தயார்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு சமூக கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும்.
சமூகத்துக்கு நேர்மையான, பக்கச்சார்பற்ற சுயசுயபரிசோதனை தேவை. மேலும், சில கடினமான கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் எங்கே தவறு செய்தோம்? பிழைகளை நீக்க என்ன செய்யலாம்? இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டுபிடிக்காவிட்டால், மக்கள்தொகையில் பாதி பேர் இருப்பதைப் போல மற்ற பாதி பேர் சுதந்திரமாக வாழ முடியாது” என்று அந்தக் கட்டுரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago