மலேசியாவின் கோலாலம்பூரில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணைத் தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் ஆக.23-ம் தேதி குழிக்குள் விழுந்த இந்தியாவை சேர்ந்த விஜய லட்சுமி கலியைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகத்தின் கூற்றுப்படி, தேடுதல் மற்றும் மீட்பு குழு காணாமல் போன இந்திய பெண்ணை தேடுவதற்கான புதிய பாதைகள் மற்றும் சாத்தியமான வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த விஜய லட்சுமி கலி (48) மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 8 மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து காணமல் போனதாக அங்குள்ள செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் கோயிலில் காலை உணவுக்காக நடந்து சென்ற போது பூமி திடீரென உள்வாங்கி குழி ஏற்பட்டுள்ளது. அதில் அவர் விழுந்துள்ளர்.

இதுகுறித்து இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆக.23-ம் தேதி வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் குழிக்குள் விழுந்த இந்தியாவை சேர்ந்த பெண்ணைத் தேடும் பணிகள் தொடர்கிறது. தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் காணாமல் போன இந்திய பெண் இருக்கும் இடத்தை கண்டடையும் புதிய பாதைகளை முறையாக கண்டறிந்து வருகின்றனர்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, இந்தாக் வாட்டர் கன்சோர்டியம், கேஎல் ஃபெடரல் டெரிட்டரிஸ் ஏஜென்சிஸிகளைத் தவிர உள்ளூர் அதிகாரிகள் தற்போது குடிமைப் பாதுகாப்பு படை மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய சிறப்பு அறிவியில் குழுக்களின் உதவியைப் பெறுகின்றன.

வடிகால் அமைப்பின் பகுதிகளை சுத்தப்படுத்திய பின்னர், தடைகளை அகற்ற உயர் அழுத்த தண்ணீர் ஜெட், ரிமோட் காமிராக்கள், மற்றும் அடையமுடியாத இடங்களைக் கண்டடைய ரேடார்கள் போன்ற சிறப்பு தொழில்நுட்பங்களுடன் தேடுதல் பணி தொடர்கிறது.

தேடுதல் பணி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் தேடுதலில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளுடனும் கோலாலம்பூர் இந்திய தூதரம் தொடர்பில் இருக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE