பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ள நிலையில் இரு நாட்டு அமைச்சர்கள் கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில நாட்களில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ள நிலையில் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவைமேம்படுத்துவது குறித்து நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியாவிலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் தரப்பில் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தக அமைச்சர் கன் கிம் யோங், உள்துறை மற்றும்சட்ட அமைச்சர் கே. சண்முகம், டிஜிட்டல் வளர்ச்சி அமைச்சர் ஜோசபின் தியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் மற்றும்போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தி, செமிகண்டக்டர், விமானத்துறை மற்றும் கடல்வழித் தொடர்பு சார்ந்து இருநாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்வது குறித்துஇந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்ற பிறகு, இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “இருநாடுகளையும் மேம்படுத்தும் வகையில் புதிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்துகலந்தாலோசித்தோம். குறிப்பாக, நவீன உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் துறையில் இணைந்து செயல்படுவது குறித்து உரையாடினோம். விமானத் துறை, கடல்வழி தொடர்பு, டிஜிட்டல், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட தளங்களில் இருதரப்பு இடையிலான வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது. விரைவில், இந்தியபிரதமர் மோடி சிங்கப்பூர் வரவுள்ள நிலையில், இந்த சந்திப்பு அதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

‘இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு’ நடைமுறை முதன்முறையாக 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. அந்த சந்திப்பு இந்தியாவில் நடைபெற்றது. இந்தமுறை சந்திப்பு, சிங்கப்பூரில் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE