கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘பெண் மருத்துவர் மரணத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சிம் பங்கா சத்ரா சமாஜ் என்ற மாணவர் அமைப்பு கொல்கத்தாவில் நேற்று பேரணி நடத்தியது. பிற்பகல் 12.45 மணிக்கு கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள், தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

6,000 போலீஸார் குவிப்பு: கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், ஹவுராவில் உள்ள நபன்னா கட்டிடத்தில் தலைமைச் செயலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், நபன்னாவை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். முன்னெச்சரிக்கை யாக, கொல்கத்தாவில் இருந்து ஹவுரா செல்லும் சாலைகளில் 21 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 6,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஹவுரா பாலம் முழுமையாக மூடப்பட்டது. ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பேரணி சென்ற மாணவர்கள், ஹவுரா பாலத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து முன்னேறினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கூட்டம் கலையாத தால் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தின் வடக்கு நுழைவுவாயில் பகுதியில் திடீரென ஏராளமானோர் திரண்டு, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே 3 மணிநேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது.

இதில் 100 மாணவர்களும், 15 போலீஸாரும் காயமடைந்தனர். இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டன.

போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக 220 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பேரணியை முன்னின்று நடத்திய சுபோஜித் கோஷ், புல்கேஷ் பண்டிட், கவுதம் சேனாபதி, பிரீதம் சர்க்கார் ஆகிய 4 பேரை காணவில்லை என்று மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். போலீஸ் பிடியில் உள்ள அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தலைமைச் செயலக பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி சாலையில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு முன்பும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர் போராட்டம் குறித்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தவிவகாரத்தை பயன்படுத்தி சட்டம் - ஒழுங்கைசீர்குலைக்க ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சிக்கின்றன. மாணவர்கள் பெயரில் அவர்கள் அனுமதியின்றி பேரணி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்’’ என்று குற்றம்சாட்டினர்.

இதை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறும்போது, ‘‘மாணவர்களின் போராட்டத்துக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவு அளித்தோம். பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள்என 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் செய்தி யாளர்களிடம் பாஜக மாநில தலைவர் சுகாந்த் மஜும்தார் நேற்று கூறும்போது, ‘‘பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய அமைதி பேரணியில் போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘அமைதி வழியில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதை மேற்கு வங்க அரசு பின்பற்ற வேண்டும். போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE