மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.

மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களை சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தே.ஜ கூட்டணியில் இருந்து 2 பேர், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.

பாஜக சார்பில் அசாமில் இருந்து மிஷன் ரஞ்சன் தாஸ், ராமேஸ்வர் தெலி, பிஹாரில் இருந்து மனன் குமார் மிஸ்ரா, ஹரியானாவில் இருந்து கிரண் சவுத்ரி, மத்திய பிரதேசத்தில் இருந்து ஜார்ஜ் குரியன், மகாராஷ்டிராவில் இருந்து திர்யா ஷீல் பாட்டீல், ஒடிசாவில் இருந்து மம்தா மொகந்தா, ராஜஸ்தானில் இருந்து ரவ்நீத் சிங் பிட்டு, திரிபுராவில் இருந்து ராஜீவ் பட்டாச்சார்ஜி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தே.ஜ. கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) சார்பில் மகாராஷ்டிராவில் இருந்து நிதின் பாட்டீல், ராஷ்டிரிய லோக் மஞ்ச் கட்சி சார்பில் பிஹாரில் இருந்து உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் தெலங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 96 ஆகவும், தே.ஜ. கூட்டணியின் பலம் 112 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆளும் தே.ஜ. கூட்டணிக்கு 6 நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவும் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. தற்போது ஜம்மு - காஷ்மீரில் 4 இடங்களும், நியமன உறுப்பினர்களின் 4 இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன. இதனால் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 237. இதில் பெரும்பான்மை இலக்கு 119. இந்த இலக்கை தே.ஜ கூட்டணி எட்டியதால், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE