இந்தியாவில் டெலிகிராமுக்கு சிக்கல்: குற்றச் செயல் ஈடுபாடு குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் டெலிகிராம் செயலி மூலம் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்துள்ளதா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கடந்த வாரம் கைது செய்தது.

பண மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் டெலிகிராம் சார்ந்து பெறப்பட்டுள்ள புகார்கள் என்ன? நிலுவையில் உள்ள அந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை மேற்கொள்ளும் அமைப்பு அல்ல. அதே நேரத்தில் சைபர் பாதுகாப்பு சார்ந்து அமைச்சகம் கவனம் செலுத்துவதாகவும், சைபர் குற்றங்கள் சார்ந்து அல்ல எனவும் இதற்கு அமைச்சகத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 முதல் இந்திய தேச பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. டிக்-டாக் தொடங்கி பல்வேறு செயலிகளுக்கு அப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தற்போது டெலிகிராம் செயலியும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE