குஜராத்தில் கனமழை: 3 பேர் பலி; 20,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் இயல்புக்கு மாறாக கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். சுமார் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), வெளியிட்ட அண்மை அறிக்கையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நிலை வரும் ஆகஸ்ட் 29 காலை வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பானாஸ்கந்தா, சபர்கந்தா, அகமதாபாத், ஆரவல்லி, கேதா, ஆனந்த், பஞ்ச்மஹால், தாஹோத், மஹிசாகர், வதோதரா, சோட்டா உதேபூர், டாங்க், தபி, சூரத், நர்மதா, பரூச், நவ்சாரி, வல்சாட் மாவட்டங்களிலும், டாமன் அண்ட் டயு மற்றும் நாகர் ஹவேலியிலும், அம்ரேலி, பாவ்நகர், மோர்பி, சுரேந்திராநகர், ராஜ்கோட், ஜாம்நகர், ஜுனகத், துவாராகா, போடாட், கச் பகுதிகளிலும் கனமழையால் பாதிக்கப்படக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த நிலை வரும் 28 ஆம் தேதி வரும் எனத் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் இயல்புக்கு மாறாக பெய்துவரும் கனமழையால் வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் அதிகபட்சமாக 270 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனந்த் மாவட்டத்தில் போர்ஸாட் தாலுகாவில் 268 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் மழை நிலவரம் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திரா படேல் கூறுகையில் இந்தப் பருவத்துக்கான சராசரி மழையளவைவிட தெற்கு குஜராத்தில் 105% மழை பெய்துள்ளது. கட்ச் பகுதியில் 95.8%, மத்திய குஜராத்தில் 77%, வடக்கு குஜராத்தில் 70.74%, சவுராஷ்டிராவில் 91% மழை பெய்துள்ளது என்றார். வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

குஜராத்தை தவிர சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 29, 30 மற்றும் செப். 1 ஆம் தேதிகளிலும், கொங்கன், கோவா பகுதிகளில் ஆகஸ்ட் 28 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளிலும், மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளிலும், விதர்பா பகுதியில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE