பிரதமர் மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்துக்கு மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில்: விரைவு நீதிமன்றங்கள் குறித்து கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “பாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொல்லும் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய சட்டங்களைகடுமையாக்க வேண்டும். மேலும்இது தொடர்பான வழக்குகளைவிரைவாக விசாரிக்க, விரைவு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். இதுபோன்ற வழக்குகளில்விரைவாக நீதி கிடைக்க 15 நாட்களில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனகூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மம்தாவின் கடிதத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தா மருத்துவமனையில் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இதில், பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரிக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக் கும் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 409 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 752 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் 20 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 123 விரைவு நீதிமன்றங்களை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் 15-ம் தேதி நிலவரப்படி ஒரு நீதிமன்றம் கூட செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே, 7 விரைவு நீதிமன்றங்களை நிறுவ தயாராக இருப்பதாக மேற்கு வங்க அரசு கடந்த ஜூன் 8-ம் தேதி கடிதம் அனுப்பியது. திருத்தப்பட்ட இலக்கின்படி 17 நீதிமன்றங்கள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் மாத இறுதி நிலவரப்படி அங்கு 6 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படத் தொடங்கின. போக்சோ, பாலியல் வன்கொடுமை தொடர்பாக 48,600 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மீதமுள்ள 11 விரைவு நீதிமன்றங்களை தொடங்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஹெல்ப்லைன்கள் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க மேற்கு வங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE