பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பாலியல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

By செய்திப்பிரிவு

ஜல்கான்: மகாராஷ்டிராவில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதி மற்றும் ரூ.5,000 கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 90.86 லட்சம் சுயஉதவி குழுக்கள் செயல்படுகின்றன. இதில் 10.05 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் நகரில் ‘லட்சாதிபதி சகோதரிகள் சம்மேளனம்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,4.30 லட்சம் சுயஉதவி குழுக்களைசேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதிமற்றும் 2.35 லட்சம் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 25.80 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.5,000 கோடி வங்கிக் கடனை விடுவித்தார். சாதனை படைத்த சுயஉதவி குழு பெண்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு வரைமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் குறைவான கடனே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு, பெண்கள் முன்னேற்றத்துக்காக எனது தலைமையிலான அரசு செய்தது போல வேறு எந்த அரசும் செய்தது இல்லை.

உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் பயணத்தில் பெண்களுக்கு முக்கியபங்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் லட்சாதிபதி சகோதரிகள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவோம் என உறுதி அளித்தேன். இதன்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சாதிபதி சகோதரிகள் பட்டியலில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

லட்சாதிபதி சகோதரிகளுக்கு வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

நம் நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் பெண்களின் சக்திஎப்போதும் மகத்தான பங்களிப்பை வழங்கி உள்ளது. இன்று வளர்ந்தநாடாக உருவெடுக்க நாம் கடினமாக உழைத்துவரும் வேளையில், இதற்கு உதவ பெண்களின் சக்தி மீண்டும் முன்வந்துள்ளது.

நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறேன். சகோதரிகள், மகள்களின் வலி மற்றும் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. இதை ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிவிட கூடாது. குற்றவாளிகளுக்கு உதவி செய்பவர்களையும் சும்மா விடக் கூடாது.

மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அரசு, காவல் துறை என எந்த நிலையில் அலட்சியம் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தகவல், கீழ் நிலையில் இருந்து மேல்மட்டம் வரை செல்லவேண்டும். அரசுகள் வரும், போகும். பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டியது சமூகம் மற்றும் அரசுகளின் பொறுப்பு.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ், பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவியை மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE