புரி ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தை புனரமைக்க கோயில் நிர்வாகம் கடிதம்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூலம் ‘ரத்ன பண்டார்’ என அழைக்கப்படுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கருவூல அறை கடந்த மாதம் திறக்கப்பட்டு அதில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பொக்கிஷங்கள், கோயில்வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கருவூல அறைக்குமாற்றப்பட்டன. இந்த பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்த 7 இரும்பு பெட்டிகள் மற்றும் அலமாரிகள் கோயில் வளாகத்தில் உள்ள நிலாத்ரி விஹார் அருங்காட்சியகம் அருகே உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ரத்ன பண்டாரில் ரகசிய அறைகள் இருக்கலாம் என்றும், அதற்குள்ளும் பொக்கிஷங்கள் இருக்கலாம் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். அதனால் ரத்ன பண்டாரில் ஸ்கேனர்கள் மற்றும் நவீன உபகரணங்கள் மூலம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அதன்பின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பாதே கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆய்வுகளை ஐஐடி அல்லது மத்திய கட்டிட ஆராய்ச்சி மையம் (சிபிஆர்ஐ) மூலம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்திஉள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE