சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ.5,000 கோடி கடன்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் ஜல்கான் நகரில் இன்று காலை நடைபெறும் லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 11 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கிறார். மேலும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.2,500 கோடி சுழற்ச்சி நிதியும், ரூ.5,000 கோடி வங்கி கடனும் வழங்குகிறார்.

நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு சுதந்திர தின உரையில் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங், எல்இடி பல்புகள் தயாரிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவின் பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகுமுறை குறித்து கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதில் சுயஉதவிக் குழு பெண்களின் பங்களிப்பை பாராட்டினார். சுய உதவிக் குழுவில் 10 லட்சம் பெண்கள் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். வேளாண் தொழில்நுட்ப துறையின் புதியகொள்கையின் கீழ் டிரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

11 லட்சம் பெண்கள்: இந்நிலையில் மகாராஷ்டிராவின் ஜல்கான் நகரில் இன்று நடைபெறும் லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்று லட்சாதிபதி சகோதரிகளாக உயர்ந்த 11 லட்சம் பெண்களுக்கு அவர் சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளிடம் அவர் இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

மேலும் 4.3 லட்சம் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி நிதியையும் அவர் வழங்குகிறார். 25..8 லட்சம் பெண்களுக்கு ரூ.5,000 கோடி வங்கி கடனையும் அவர் வழங்குகிறார்.

அதன்பின் ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் 70-ம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில், அவர் தலைமை விருந்தினராக பங்கேற்று, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE